கேளம்பாக்கத்தில் இன்று காலை 2 மாடி ஜவுளிக்கடையில் தீ விபத்து

06.08.2023 08:51:16

வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் ஜவுளிக்கடையை மூடிச் சென்றனர். தீவிபத்தால் பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்போரூர்: சென்னை தி.நகரைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேன், அப்துல்லா. இவர்கள் பழைய கேளம்பாக்கம், மாமல்லபுரம் சாலையில் 2 மாடிகள் கொண்ட ஜவுளிக் கடை நடத்தி வருகின்றனர். இங்கு துணிகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் ஜவுளிக்கடையை மூடிச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி 2 மாடிகளும் பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிறுசேரி, திருப்போரூர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு துறை உதவி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் விரைந்து வந்தனர். கடை இருந்த இடம் குறுகலான இடம் என்பதால் பொக்லைன் இயந்திரம் மூலம் கடையின் ஷட்டரை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கடையில் இருந்த துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதிய முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. சுமார் 4 மணிபோராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த அணைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீ விபத்தை பார்த்து கடையின் உரிமையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கதறி அழுதனர். சேதமதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தால் பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து திருப்போரூர் நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.