226 பேரை கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்!

24.05.2026 13:28:33

வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா, இன்று (23) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிவப்பு அறிவித்தல் மூலம் 35 சந்தேகநபர்களும், ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 33 பேரும், மேலும் சுமார் 68 முதல் 70 வரையிலான சந்தேகநபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தற்போது வரை குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக சுமார் 226 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த 226 பேரில் சுமார் 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பதுங்கியிருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.