அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் செயற்படவேண்டும்!
மக்களுக்காகக் கொண்டு வரப்படுகின்ற நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளுக்கும் உள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உறுமய வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். 20 இலட்சம் மக்கள் அதனால் பயனடைவர். வரலாற்றில் ஒருபோதும் இந்நாட்டில் இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. உறுமயவின் முதற்கட்டமாக 10,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
பொருளாதார நெருக்கடியால், மக்கள் மத்தியில் வறுமை அதிகரித்தது. 05 இலட்சம் பேர் தொழிலை இழந்தனர்.
மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எதிர்வரும் நாட்களில் இந்தச் சந்திப்புகளை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.