சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி கைது

13.05.2022 09:17:27

சண்டிகாரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 பேர் உள்பட 6 பேர் கடந்த 10-ந்தேதி திடீரென நுழைந்தனர். பின்னர் அந்த நிறுவனத்தில் அதிரடியாக அவர்கள் சோதனையிட்டனர். பின்னர் நிறுவன உரிமையாளரிடம், ‘நீங்கள் பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்’ என மிரட்டினர்.

அத்துடன் அவரை வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றிக்கொண்டு சென்ற அதிகாரிகள், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.25 லட்சம் தர வேண்டும் என மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நிறுவன உரிமையாளர், இது குறித்து சி.பி.ஐ. தலைமைக்கு புகார் செய்தார். இதையறிந்த சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

எனவே இது குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். அப்போது அந்த நிறுவனத்தில் போலியாக சோதனை நடத்தியது, டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் என தெரியவந்தது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் பணிநீக்கம் செய்யவும், கைது செய்து விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 4 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அத்துடன் 4 சப்-இன்ஸ்பெக்டர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பணம் பறிக்கும் நோக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளே போலியாக சோதனை நடத்திய சம்பவம் சி.பி.ஐ. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.