‘மின் கட்டணத்தில் சலுகை’.
|
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்கிருந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்கள், தேநீர்க் கடைகள் மற்றும் பிற தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. |
|
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், உணவுத் துறை அதிகாரி, எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் இன்று (14-03-26) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். அதில் மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. சிலிண்டர் விநியோகத்தில் மருத்துவமனை, கல்லூரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கூடுதல் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பை பயன்படுத்தும் உணவகங்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் அடுப்பு பயன்படுத்துவதால் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 சலுகை அளிக்கப்படுகிறது. டீக்கடையாக இருந்தாலும் மின்சார கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த மாதத்தைவிட கூடுதலாக ஏற்படும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. சிலிண்டர் பிரச்சினை சரியாகும் வரை இந்த சலுகை தொடரும். விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம். ரேஷன் கடை மூலம் மக்களுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வீணாவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும். 9 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. கடந்த 2 நாட்களில் பெட்ரோல் விற்பனை 100%, டீசல் 75% என கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை வழக்கமான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. எனவே, சிலிண்டர், டீசல், பெட்ரோல் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம். கள்ளச்சந்தையில் பெட்ரோலியம், எரிவாயு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். |