தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
மேலும், தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை இம்மாதம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,
டிஜிட்டல் வியூகத் திட்டம் - 2030க்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.அதில் 06 முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளோம். அதில் முதலாவது உட்கட்டமைப்பு வசதிகள், இணைப்பு மற்றும் அணுகல், திறன்கள், கல்வியறிவு, கைத்தொழில்கள் மற்றும் தொழிற்துறை, இணைக்கப்பட்ட டிஜிட்டல் அரசாங்கம். (connected Digital Government) மேலும், சைபர் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு,தனித்தன்மை, டிஜிட்டல் நிதிச் சேவைகள், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைகளின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை சுட்டிக்காட்டலாம். வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணைந்து ஜூன் 25ஆம் திகதி உலகளாவிய முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது.
மேலும், பாடசாலைகளுக்கு 1000 ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், தகவல் தொழில்நுட்பம் அல்லாத பட்டதாரிகள் மற்றும் NVQ 4 தகுதி பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், 28 வருடங்களுக்குப் பின்னர், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தச் சட்டமூலம் நாளை (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடலுக்கு கீழ் பயன்படுத்தப்படும் கேபிள் இணைப்புகளுக்கு சட்டவிதிகள் இருக்கவில்லை. அதற்கான சட்டவிதிகளை இந்த சட்ட மூலத்தின் மூலம் சமர்பிக்க முடிந்துள்ளது.
அனைத்து விதமான சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 74 மில்லியனாக அதிகரித்துள்ளது. எனவே தேசிய சைபர் பாதுகாப்பு சட்டம் அவசியப்படுகின்றது. அதன்படி, குறித்த சட்டத்தை இம்மாதம் வரைய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், SL CERT நிறுவனத்துடன் இணைந்து 29 அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் சைபர் பாதுகாப்பை அதிகரிக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக 05 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பின்னவல மற்றும் கிதுல்கல சுற்றுலா கொரிடோவை அபிவிருத்தி செய்வதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.