சீமான் வெற்றிக்கு உதவப்போகும் விஜய்!
|
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக நேருக்கு நேர் மோத வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படும் சூழலில், சீமானின் வெற்றிக்கு தவெகவும் மறைமுகமாக உதவக் கூடும் என்று கருதப்படுகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு முன் நாதக வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. |
|
ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்புக்கும் சரிபாதி இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் நேரடியாக களமிறங்க உள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் நாதகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகியோர் வேண்டாம் என்று நினைப்பவர்களின் ஆதரவை சீமான் தொடர்ச்சியாக பெற்று வருகிறார். அதேபோல் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் இருப்பது அக்கட்சிக்கு சில பின்னடைவை உருவாக்கி வருகிறது. இருந்தாலும் இதுவரை நாதக எந்தவொரு தேர்தலிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை. இம்முறை சீமானின் 3வது இடத்திற்கு தவெக மிகப்பெரிய போட்டியாக வந்துள்ளது. எப்படியாவது விஜய்யை விட கூடுதல் வாக்குகளை பெற்றிட வேண்டும் என்பதில் நாதக தீவிரமாக இருக்கிறது. இதனால் தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் பலம் வாய்ந்த வேட்பாளர்களையும், தென் மாவட்டங்களில் கூடுதல் கவனமும் செலுத்தி வருகின்றனர். அதேபோல் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு பல்வேறு காரணங்களும் அடங்கி இருக்கிறது. அதாவது காரைக்குடி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக களமிறங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எழுதி வைக்கப்பட்ட தொகுதிகளில் காரைக்குடியும் ஒன்று. இதனால் அங்கு போட்டியிட்டால் இரு கட்சியினரும் தன்னை ஆதரிக்க வாய்ப்பு அதிகம் என்று சீமான் கருதுகிறார். அதேபோல் திமுக மற்றும் அதிமுக பக்கம் செல்லும் வாக்குகளை தவெக வேட்பாளர் பிரபு பிரிப்பார் என்பதை நாம் தமிழர் கட்சி கணக்கிட்டிருக்கிறது. இதனால் சீமானின் வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவுவதாக பார்க்கப்படுகிறது. |