தண்ணீர், கழிவறை வசதிகள் துண்டிப்பு- டெல்லியில் போராடும் விவசாயிகள் தவிப்பு

03.02.2021 10:42:04

டெல்லி எல்லைகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த பகுதிகளில் தண்ணீர், கழிவறை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் 2 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு 11 முறை பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். பொது சொத்துக்கள் சேதம் அடைந்தன.

இந்தநிலையில் விவசாய சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி வருகிறார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க போலீசார் தடுப்பு வேலிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டெல்லியின் எல்லை பகுதியான காசிப்பூரில் சாலைகளுக்கு நடுவே ஆணிகளுடன் கூடிய முள்வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

அதேபோல் சிங்கு பகுதி எல்லையிலும் பள்ளம் தோண்டப்பட்டு பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தன்று நடந்தது போல மீண்டும் விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லிக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.

டெல்லி எல்லைகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த பகுதிகளில் தண்ணீர், கழிவறை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக டெல்லியில் போராடும் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தண்ணீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். நெடுஞ்சாலையில் உள்ள பல நிறுவனங்கள் விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவுகின்றன. அடிப்படை வசதிகள் இல்லை என்ற போதும், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையே பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் நெடுஞ்சாலைகளில் வருகிற 6-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தை தடுக்க துணை ராணுவப்படை, சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்தையை தொடங்க வேண்டும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

இதுகுறித்து விவசாயிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் மீதான அடக்குமுறையை கைவிடாத வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம். கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறும்போது, ‘மத்திய அரசு எவ்வளவு அடக்குமுறைகளை கையாண்டாலும் நாங்கள் போராட்ட களத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். எங்களுடைய போராட்டம் அக்டோபர் மாதம் வரையிலும் தொடர்ந்து நடக்கும்’ என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

டெல்லி எல்லைகளில் தடுப்புகள், வேலிகளை போலீசார் அமைத்திருப்பது எங்களை தடுக்கவா அல்லது எங்கள் குரலை தடுக்கவா என்று தெரியவில்லை. எங்களின் தகவல் பரிமாற்றமும் தடுக்கப்பட்டுள்ளது. எங்களை தடுக்க என்ன செய்வது என்றே அரசுக்கு தெரியவில்லை.