சாலே குறித்த முறைப்பாடு .

09.06.2026 08:54:04

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தொடர்பான விசாரணைகளுக்கு அமைய விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  

சுரேஷ் சாலேவின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், சுரேஷ் சாலேயிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதுடன், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டுக்கு அருகில் இருந்த ஏனைய சந்தேகநபர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சுரேஷ் சாலேவின் நிலைமை குறித்துக் கண்டறிவதற்காக நேற்று (08) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தங்களால் அன்றைய தினம் வர முடியாது எனத் தெரிவித்து அவர்கள் வேறு ஒரு திகதியைக் கோரியிருந்தனர்.

இதற்கமைய, குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.