தமிழர் தரப்புக்கு வோஷிங்டன் கறார் செய்தி

03.02.2023 00:36:39

இலங்கையில் அதிபர்   ரணிலின் மற்றும் தமிழ்பேசும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேற்று(1) பேச்சு நடத்திய அமெரிக்க இராஜாங்க திணைக்கள மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நூலண்ட் இரண்டு தரப்புகளுக்கும் வோஷிங்டன் சார்பாக கூற வேண்டிய சில விடயங்களை கூறிவிட்டு நேற்றைய தினம் மாலையே கட்டாருக்கு பறந்திருக்கின்றார்.

விக்டோரியா நூலண்ட்டின் நேற்றைய சந்திப்புகளின் போது ராஜபக்ச அதிகாரம் மையம் இல்லையென்றால் அவர்களின் பங்காளிகளை சந்திப்பதில் சற்று தயக்கம் காட்டி இருந்தார்.

குறிப்பாக சிறிலங்காவின் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திப்பதில் அவர் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை.

அண்மையில் வோஷிங்டனில் வைத்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனை சந்தித்துப் பேசிய சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியுடன் மட்டும் அவர் நேற்று பேசியிருக்கிறார்.

பேச்சுக்களின் முடிவு

இந்தப் பேச்சுக்களின் முடிவில் உள்ளூராட்சி தேர்தலில் நடத்தப்பட வேண்டும், தமிழர் தரப்புடனான பேச்சுக்கள் முன்னகர்த்தப்பட வேண்டும், சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற செய்திகள் சொல்லப்பட்டு, இவ்வாறான நகர்வுகள் இடம்பெறாவிட்டால் என்ன இடம்பெறும் என்பதையும் விக்டோரியா நூலண்ட் கொழும்புக்கு சூசகமாக கூறியிருக்கிறார்.

அந்தச் சூசகத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு இளைஞர்கள் வீதியில் இறங்கி அரகலய ஊடாக சில மாற்றங்களை உருவாக்கியுள்ளதால் அரசாங்கம் அந்தப் பட்டறிவின் அடிப்படையில் இவ்வாறான நகர்வுகளை எல்லாம் செய்ய வேண்டும் என வோஷிங்டன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதேபோல, சமகாலத்தில் திக்கொன்றாக நிற்கும் தமிழர் தரப்பு தலைகளுக்கும் அவர் ஒன்றுபட்டு நில்லுங்கள் என்ற ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்.

தமிழர் தரப்பு ஒற்றுமை

அண்மையில் இலங்கையில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னதைப் போலவே இப்போது விக்டோரியா நூலண்ட்டும் தமிழர் தரப்புக்கு ஒற்றுமையை வலியுறுத்தி இருக்கின்றார்.

தமிழ் மக்களுக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு இவ்வாறான ஒற்றுமை தேவை என்பது மீண்டும் ஒருமுறை வோஷிங்டனில் இருந்து இடித்துரைப்பாக கூறப்பட்டிருக்கிறது.

தற்போது தமிழர் தரப்பு  நடத்தும் பேச்சுக்களின் மூலம் தமிழ் மக்களுக்குரிய முடிவுகளின் உருவாக்கத்தை காண அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக கூறிய நூலண்ட், சுயலாப நகர்வுகளை விடுத்து சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் உறுதியான தீர்வுகளை வழங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்.

அத்தோடு தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்களை வோஷிங்டனும் தற்போது ஊக்குவித்துக் கொள்வதால், பேச்சுக்கள் இன்னமும் உறுதியாக மாற்றப்பட வேண்டும் என்ற செய்தியையும் அவர் தனக்கேயுரிய இராஜதந்திர மொழியாடலில் கூறியிருக்கிறார்.

இதே சமகாலத்தில், சீனாவையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கைக்கு வழங்கும் விடயத்தில் சீனா முறையாக நகரவில்லை எனவும் முறையான உத்தரவாதங்களை வழங்கவில்லை எனவும் அவர் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

ரணிலின் ஊகம்

இதேவேளை விக்டோரியா நூலண்ட் தன்னுடன் பேசும்போது என்னவெல்லாம் எதிர்பார்ப்பார் என்று ஊகித்த சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க அதற்கு ஏற்ப 13 ஆம் திருத்தத்தின் முழுமையான நடைமுறை குறித்தும் விக்டோரியா நூலண்டிடம் தெரிவித்திருக்கிறார்.

ரணிலின் நல்லிணக்க முயற்சி முறிவடைந்திருப்பதாக   பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள நிலையில், ரணில் இந்த தந்திரத்தை பிரயோகத்திருக்கிறார்.

ஆக மொத்தம், விக்டோரியா நூலண்ட் அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த இராஜதந்திர அதிகாரி ஒருவர் அடுத்த முறை இலங்கைத் தீவில் கால் பதிக்கும் முன்னர் சில விடயங்களை கொழும்பு அதிகார மையமும் செய்ய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் தான் நிர்ணயத்தை விடயங்களின் நடைமுறைகள் குறித்து நோட்டம் விடுவதற்காக அவர் நேற்றைய தினம் வருகை தந்த நிலையில், இப்போது மூன்று விடயங்களில் அவர் கொழும்புக்கு கறாரான செய்திகளை வழங்கி இருப்பதாக தெரிகிறது.