13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றுபட வேண்டும்

26.03.2024 07:56:57

சித்தார்த்தன் எம்.பி கோரிக்கை

இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒற்றுபட வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் காணப்படுகின்றது. எனினும் அது போதும் எனக் கூறவில்லை. ஆனால் அதை ஏற்றுக் கொள்வதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களுக்குள் பலர் அதை மறுக்கின்ற தன்மை இருந்தாலும் கூட இந்த 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தொடர்ந்து வருகின்ற அரசாங்கள் பின்னடித்துவருவதை கண்கூடாக காண்கின்றோம். வடக்கு – கிழக்கில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.. இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு வசதியாக கனடா விசா, லண்டன் விசா கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வருடத்தில் வடக்கு – கிழக்கிலிருந்து ஏறக்குறைய சுமார் 20 ஆயிரம் பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

 

ஆகவே, கையில் இருப்பதையாவது இறுக்கமாக பற்றி வடக்கு – கிழக்கை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் 5 கட்சிகள் ஒற்றுமையாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்ற பெயரில் இயங்கி வருகின்றோம்.

தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளை நோக்கி நகர்வதற்காக ஒற்றுமையாக அமைக்கப்பட்ட அமைப்பு இது. தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக் கூடிய கட்சிகள் அனைத்தும் இதில் இணையக்கூடிய வகையில் தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.