175 புது முகங்களுடன் நாடாளுமன்றம் பட்டபாடு!

22.11.2024 09:05:28

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவர் ஆகியோர் புது முகங்களாகவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பாராளுமன்றத்தில் 175 வரையிலான எம்.பி.க்கள் புது முகங்களாகவே உள்ளனர்.

   

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமானது. அரச தரப்பு பக்கத்தில் அமைச்சர்கள் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் எதிர்கட்சிதரப்பில் சிரேஸ்ட எம்.பி.க்கள் அனைத்தும் புது முகங்களினால் நிரம்பியிருந்தது.

எதிர்க்கட்சி பக்கத்தில் எதிர்கட்சித்தலைவர் வழமையாக அமரும் ஆசனத்தில் சபை கூடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்னரே யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு எம்.பி. யான இ.அர்ச்சுனா வந்து அமர்ந்திருந்தார். அப்போது அது எதிர்கட்சித்தலைவருக்குரிய ஆசனம் என பாராளுமன்ற உதவியாளர்களினால் அர்ச்சுனாவுக்கு கூறப்பட்டபோதும் அதிலிருந்து எழுந்திருக்க மறுத்த அவர் இன்றைய தினம் எந்த ஆசனத்தில் எவரும் அமர முடியுமென கூறிய போது எதிர்கட்சித் தலைவரின் ஆசனத்தில் பாராளுமன்ற சம்பிரதாயப்படி வேறு எம்.பி.க்கள் அமருவதில்லை என பாராளுமன்ற உதவியாளர் தெளிவுபடுத்திய போதும் அர்ச்சுனா எம்.பி. எழும்ப மறுத்து அந்த ஆசனத்திலே அமர்ந்திருந்தார்.

அத்துடன் அர்ச்சுனா எம்.பி.தான் சபையில் இருப்பதையும் தனது செல்போன் ஊடாக நேரலை செய்ததுடன் சத்தியப்பிரமாண ஆவணங்களையும் செல்போனில் படம்பிடித்துக்கொண்டிருந்தார் இதனால் சபைக்குள் வந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு ஆசனத்திலேயே அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோதும் அர்ச்சுனா எம்.பி எதிர்கட்சித்தலைவரின் ஆசனத்திலே மீண்டும் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த படைக்கல சேவிதரும் அது எதிர்கட்சித்தலைவரின் ஆசனம் என்று கூறியபோதும் அவருடன் முரண்பட்த்துடன் ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டார். பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி.யின் நடவடிக்கை ஏனைய எம்.பி.க்களுக்கும் தெரியவரவே அவர்கள் இவரின் நடவடிக்கையை கேலியாக பார்த்து சிரித்தவாறு அமர்ந்திருந்தனர். அப்போது உள்ளே வந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வேறு ஆசனத்திலேயே அமர்ந்தார்.

அதேவேளை சிறீதரன் .கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முன்வரிசையில் அருகருகே அமர்ந்திருந்த நிலையில் நாமல் ராஜபக்ச ,ரவி கருணாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் முன்வரிசையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.