பிரதமரின் பங்கேற்பில் 2026 பொப்பி மலர் தின விழா.

08.11.2026 15:49:59

2026ஆம் ஆண்டுக்கான பொப்பி மலர் தின விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்புடன் இன்று (08.11.2026) கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக நடைபெற்றது.

 

விழா நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த பிரதமருக்குப் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாத்தியக் குழுவினர் முன்னே அழைத்துச் செல்ல, அவர் பிரதான மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

 

பின்னர், விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்திற்குப் பிரதமர் உள்ளிட்ட அதிதிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

 

இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், முன்னாள் தளபதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல கௌரவ அதிதிகள் கலந்து கொண்டனர்.