இரதோற்சவம் -மட்டக்களப்பு புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன்

27.03.2021 08:56:57

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு -கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு நகரில் உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்புக்கொண்டதுமான இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவமானது 10 தினங்கள் நடைபெறுகின்றது.

ஆலயத்தில் நேற்று மாலை சப்புரத்திருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன், தினமும் பிற்பகல் மாலை வேளைகளில் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ சிவலோகேஸ்வரன் குருக்கள் தலைமையில் உற்சவங்கள் நடைபெற்றன.

இன்று காலை கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து, அம்பாள் உள்வீதியுலா சென்று, அரோகரா கோசத்திற்கு மத்தியில் இரதத்தில் ஏறி பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளில் பங்கெடுத்ததுடன், பக்தர்களுடன் இணைந்து ரதோற்சவத்திலும் கலந்துகொண்டார்.

கடுமையான மழைக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளைப் பேணிய வகையில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பான முறையில் இரதோற்சவம் நடைபெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்தில் அம்பாளின் தீர்த்தோற்சவம் நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.