விரும்பாதவர்களுக்கு மக்கள் பதிலளிப்பர்
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்க முடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்கள தேசிய வாதத்தையே பின் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில், வியாழக்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
தமிழ் கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது. அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இந்த தேர்தலில் தமிழ் கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழே போட்டியிடுவோம் என்று முயற்சிகளை எடுத்திருந்தோம். அது சாத்தியப்படவில்லை. எனவே அது மன வேதனையை அளிக்கிறது.இருப்பினும் நாம் ஐந்து கட்சிகள் தற்போது ஒன்றாக இருக்கிறோம். ஏனையவர்களையும் உள்ளே கொண்டுவருவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்வோம்.
தேர்தலின் பின்னராவது தமிழ் கட்சிகள் இணைந்து செல்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருக்கும். இவ்வாறு மக்கள் பாடம் புகட்டும் போது ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுபவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் அது தொடர்பான கருத்துக்களை கூறமறுக்கின்றனர். எனவே அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட ஊதியம் கூட்டப்பட வேண்டும். எமது கட்சி இதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.
பாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்களை கூடுதலாக எடுக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே ஊழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசால் காட்டப்படுகிறது.அத்துடன் மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்பது இந்த அரசாங்கத்தின் குரலாக உள்ளது.குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் இவர்களே. ஆனால் அதை நீக்குவதற்கான சூழலில் அவர்கள் இருப்பது போல் தெரியவில்லை.
இடதுசாரித்துவத்தினை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று சிங்களதேசிய வாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது.அந்த வகையில் திடமான ஒரு அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
எனவே நாம் 11 ஆசனங்களை பெறும் போது அதிகாரம் மிக்கவர்களாக இருப்போம்.இம்முறை தமிழ்த்தரப்பை புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதனை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழ்த்தரப்பு இருக்கும். என்றார்.