பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அவசியமான நடைமுறைகள் இலங்கையில் இல்லை

05.07.2026 13:42:15

ஹெய்ட்டிக்கு அனுப்பிவைப்பதற்கான தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் மதிப்பீட்டு செயன்முறை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? மீறல்கள் இடம்பெறாதவண்ணம் எத்தகைய முன்கூட்டிய பாதுகாப்புச் செயன்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன? எனக் கேள்வி எழுப்பியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் எவரும் தகுதி மதிப்பீட்டு செயன்முறையில் பங்கேற்பதிலிருந்து விலக்கிவைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    

 

சர்வதேச குண்டர் ஒழிப்புப் படையின் ஓரங்கமாக இலங்கையின் பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஹெய்ட்டிக்கு அனுப்பிவைக்கப்பவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ரென்சோ போமி கூறியிருப்பதாவது:

கடந்த காலங்களில் ஹெய்ட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இலங்கைப் பணியாளர்களால் சிறுவர்கள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும், இன்னமும் தீர்வு காணப்படாத குற்றச்சாட்டுக்கள் நீடிக்கின்றன.

அவ்வாறிருக்கையில் தற்போது மீண்டும் ஹெய்ட்டிக்கு அனுப்பிவைப்பதற்கான தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் மதிப்பீட்டு செயன்முறை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது?, மீறல்கள் இடம்பெறாதவண்ணம் எத்தகைய முன்கூட்டிய பாதுகாப்புச் செயன்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன?, இலங்கை உள்ளடங்கலாக ஹெய்ட்டிக்கு அனுப்பப்படும் சகல படையினருக்கும் எதிராக எதிர்வருங்காலங்களில் புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், அவற்றைக் கையாள்வதற்கு நிறுவப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் வழிமுறைகள் என்ன? என்பது பற்றி இலங்கை அதிகாரிகள், சர்வதேச குண்டர் ஒழிப்புப் படைக்குத் தலைமை தாங்குவோர், பங்காண்மை நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும்.

அதேவேளை போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் எவரும் தகுதி மதிப்பீட்டு செயன்முறையில் பங்கேற்பதிலிருந்து விலக்கிவைக்கப்படவேண்டும்.

ஹெய்ட்டியிலும், ஏனைய பகுதிகளிலும் அமைதிப்படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது பெரிதும் கவலையளிக்கிறது. மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கினால் ஏற்படும் பாதிப்புகளுக்கான விலையை நலிவுற்ற சூழலில் வாழும் மக்களே செலுத்தவேண்டியுள்ளது.

இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,132 பணியாளர்களைக்கொண்ட ஒரு குழுவை உடனடியாக ஹெய்ட்டிக்கு அனுப்பிவைப்பதற்கு இலங்கை தயாராகி வருகிறது. இது இற்றை வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச படையொன்றுக்காக அனுப்பிவைக்கப்படும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்களைக்கொண்ட ஒரு படைப்பிரிவாகும்.

2004 - 2007 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அமைதிப்படையில் அங்கம் வகித்த 100 க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர். இருப்பினும் தற்போதுவரை வெளிப்படையாக உள்ள தகவல்களின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டு ஹெட்டியில் பதிவான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்கள் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு இராணுவ வீரரும் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், உள்நாட்டு ஆயுதமோதலின்போது பாதுகாப்புப்படையினரால் ஆண், பெண் இருபாலாருக்கும் எதிராகப் பாலியல் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

எனினும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இவ்வாண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அவசியமான நடைமுறைகள் இலங்கையில் இல்லை என்பதையே காண்பிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.