ஆப்கான் மகளிர் அணியை தடை செய்தால் ஆடவர் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம் – அவுஸ்திரேலியா
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கான் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான்கள் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு இடைக்கால அரசு அமைக்கவும் முடிவு செய்து அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே பெண்களுக்கு உரிமைகள் முழுமையாக வழங்கப்படும் என அறிவித்திருந்த தலிபான் அமைப்பினர், திடீரென பெண்கள் அரசியலில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர்.
பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்து, கிரிக்கெட் விளையாடவும் அனுமதி மறுத்துள்ளனர்.
தலிபான்கள் அமைப்பின் கலாசாரப் பிரிவின் துணைத் தலைவர் அஹமத்துல்லாஹ் வாசிக் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது.
கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும்.
இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் பாதுகாப்பானது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், வரும் நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி அவுஸ்ரேலியாவில் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
ஆப்கானில் மகளிர் கிரிக்கெட் விளையாடத் தலிபான்கள் தடை விதித்தால், ஆடவர் அணியுடன் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில், “மகளிர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் சபைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் பெண்களும் கிரிக்கெட் விளையாட ஆதரவு தருவோம்.
ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
பெண்கள் கிரிக்கெட்டைத் தலிபான்கள் தடை செய்தால், ஹோபர்ட்டில் நவம்பர் மாதம் ஆப்கான் ஆடவர் அணியுடன் அவுஸ்திரேலிய அணி, விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதைத் தவிர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளது.