மஹர சிறைச் சம்பவம் நிர்வாகத்தை முடக்கும் சதியா?
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம், சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் ஒரு அலை போல பரவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எவ்வித சூழ்நிலை உருவெடுத்தாலும், உயிர்ச்சேதங்களைக் குறைத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தவிர, மேலும் இரண்டு அல்லது மூன்று சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கிடைத்த தகவல்களும் சிறைச்சாலைகள் திணைக்களத் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தொடர்பான தகராறு என்றபோதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் கைதிகளால் நிர்வாகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஒன்று என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் திரண்டுவந்து, இதுவரை இல்லாத வகையில் தீ வைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதன் பின்னணியில் அமைக்கப்பட்ட சதிக்குழு ஒன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இவ்வாறான செயல் இடம்பெற்றிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், தீ வைத்து அழிக்கப்பட்டது பொதுமக்களின் வரிப்பணம் என்பதையும், அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியதும் அதே பணத்தில்தான் என்பதையும் கைதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையில், அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட செயலாளர்கள், பொலிஸார், இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.