ரணிலின் நகர்வுக்கு யாழ். பல்கலை கடும் எதிர்ப்பு

13.01.2023 21:14:57

சர்வதேசத்திற்கு தமிழர்களுடன் இணைந்திருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்து முகமாக தேசிய பொங்கல் விழாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழில் நடத்துவதை எதிர்ப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வடக்கு - கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில், தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிவழி போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழா

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் மக்கள் வடகிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளும் இன்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் காணாமலாக்கப்பட்டோர், அரசியல்கைதிகள், காணி விடுவிப்பு , இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் என அரசின் திட்டமிடப்பட்ட இனபிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையில் தேசிய பொங்கல் விழா ஒன்றினை இந்த அதிபர் எவ்வாறான மனநிலையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்.

அதிபர் பொங்கல் விழாவை மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றினை வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.

ஆகவே முதலில் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இது தீர்க்கப்படாது மேற்கொள்ளப்படுகின்ற குறித்த பொங்கல் நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

கவனயீர்ப்பு போராட்டம்

இன்று எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் சிவில் அமைப்புகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) 3 மணியளவில் குறித்த பொங்கல் நிகழ்வு நல்லூர் பகுதயில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் இடம்பெற இருக்கின்ற தருணத்தில், 1 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று நிறைவடையும்.

அதே நிலையில், இந்தப் பொங்கல் நிகழ்வில் வடகிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள், உட்பட்டவர்கள் அரசியல் பேதமின்றி குறித்த பொங்கல் நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு எங்களுடைய இந்த சாத்வீக போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பதோடு, அனைத்து சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” - என்றார்.