திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு!

10.07.2023 21:11:26

திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமைந்துள்ளமையினால் அதனால் எந்தவொரு தீர்வும் கிடைக்காது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் 

அதிகர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் ஊடாக அனுப்பி வைத்த பின்னர் இதனை கூறியுள்ளார்.

ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.