டீசல் கொள்வனவில் 350 கோடி ரூபா நட்டம்!

21.04.2026 08:47:15

நாட்டுக்கு 5 கப்பல் டீசல் எரிபொருள் கொண்டுவர ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனம், இரண்டு கப்பல்களை மாத்திரம் கொண்டுவந்த பின்னர் யுத்த நிலைமை காரணமாக 3ஆவது கப்பலை கொண்டுவர முடியாது என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெற்றொலிய கூட்டுத்தாபனம் டீசல் கொள்வனவுக்கு போட்டியற்ற விலை மனு கோரியபோது, குறித்த நிறுவனமே அந்த விலைமனுவை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு டீசல் கொண்டுவந்திருக்கிறது. இதனால் நாட்டுக்கு 350 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைலரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

   

ஐக்கிய குடியரசு முன்னணி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நிலக்கரி கொள்வனவின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிக்கு சமமாக பாரிய மோசடி எரிபொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் கொள்வனவின்போது மேற்கொள்ளப்படுகின்ற பிரீமியம் நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளது. பிரியம் என்பது எரிபொருள் விநியோகஸ்தர் ஒருவர் எரிபொருள் கொண்டுவர தனக்கு ஏற்படுகின்ற செலவுகளை கழித்து ஒரு பீப்பாய்க்காக அவரால் தெரிவிக்கப்படும் விலையாகும்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பில் மறைந்துகொண்டு இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு கடந்த வாரம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் கடந்த வாரம் எச்.எஸ்.பி,சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாள சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய் கொள்வனவுக்கு 286 டொலர் செலுத்தி இருப்பதாக தெரிவித்த பின்னரே இந்த விடயம் வெளியில் வந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர், 286 டொலருக்கு டீசலே கொள்வனவு செய்ததாக தெரிவித்திருந்தார். அந்த விலைக்கு டீசல் கொள்வனவு செய்தால், இலங்கையில் ஒரு லீட்டர் டீசல் 700 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டிவரும்..ஆனால் சிங்கப்பூரில் டீசல் விலை 170 டொலர் வரையறையிலே தற்போது இருக்கிறது. 200 டொலர் வரை விலை அதிகரிக்கப்பட்டது உண்மை. ஆனால் இந்ததளவு விலை அதிகரித்துள்ள நிலையில் எந்தவொரு நாடு எரிபொருள் கொண்டுவர முயற்படுவதில்லை. ஏனெனில் உலக சந்தையில் விலை ஏற்றத்தாழ்வு விரைவாக இடம்பெறுகிறது.

அநுரகுமாரவின் அரசாங்கம் 5 டீசல் கப்பல்களை கொண்டுவர டெபிகியுரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதில் பீப்பாய் ஒன்றுக்கு 3.8 டொலருக்கே பிரிமியம் கிடைத்தது. அதில் அவர்கள் எங்களுக்கு 2 டீசல் கப்பல்களை வழங்கி இருந்தார்கள். என்றாலும் யுத்த நிலைமை காரணமாக அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததால், 3ஆவது டீசல் கப்பல் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவசர நிலைமை காரணமாக 3ஆவது கப்பலை எங்களுக்கு கொண்டுவர முடியாது எனவும் குறித்த நிறுவனம் எமக்கு அறிவித்திருந்தது. அவ்வாறான நிலையில் குறித்த டீசல் கப்பலை தொடர்ந்து கொண்டுவருகிறதா இல்லையா என்பதுதொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிலைப்பாடு எங்களுக்கு தெளிவில்லாமல் இருந்தது.

என்றாலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த காலப்பகுதியில் டீசல் மற்றும் ஜெட்போம் எண்ணெய் கொண்டுவருவதற்கு போட்டியற்ற விலை மனுவொன்றை பகிரங்கப்படுதி இருந்தது. அந்த விலைமனு கோரலில் டெபிகியுரா நிறுவனத்துக்கே விலை மனு கிடைக்கிறது. ஆனால் அவசரகால நிலைமை காரணமாக டீசல் கொண்டுவர முடியாது என்ற அந்த நிறுவனம் தற்போது போட்டியிற்ற விலை மனுமூலம் பீப்பாய் ஒன்று 48 டொலருக்கு கொண்டுவந்திருக்கிறது. இதன் பிரகாரம் 2இலட்சத்தி 48ஆயிரம் பீப்பாய் டீசலும் 64ஆயிரம் ஜெட்போம் எண்ணெய்யும் கொண்டுவந்திருக்கிறது. இதற்கு முன்னர் அந்த நிறுவனம் பீப்பாய் ஒன்று 3.8 டொலருக்கே கொண்டுவந்தது. தற்போது பீப்பாய் 48 டொலருக்கே கொண்டுவந்திருக்கிறது. இதன் மூலம் ஒரு பீப்பாய்க்கு 44.2 டொலர், அதாவது 350 கோடி ரூபா வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நடைமுறை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த காலங்களிலும் இடம்பெற்றிக்கிறது.இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர்தான் ஜனாதிபதியும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் முந்திக்கொண்டு, கடலில் வரும் எரிபொருள் கப்பல்களை எப்படியாவது எமது நாட்டுக்கு திருப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இது இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனத்துக்கும் புதிய விடயம் அல்ல. தற்போதைய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரும் இந்த விளையாட்டை நன்கு தெரிந்தவர். இவ்வாறானதொரு சம்பவம் 2011இலும் இடம்பெற்றது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் பெளசி தலைமையில் குழுவொன்றை நியமித்தார், அந்த குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். நாங்கள் மேற்கொண்ட விசாரணையில், அப்போதைய பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குற்றவாளியாக தெரிவிக்கப்பட்து.

அதனால் இந்த பிரீமியம் விளையாட்டு கடந்த காலங்களில் இருந்து இடம்பெற்று வருகிறது. அதனால் தற்போது நிலக்கரி மாேசடி தொடர்பில் விிசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருக்கிறார். அந்த குழுவுக்கே இந்த எரிபொருள் மோசடி தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ள அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க முடியும். அதேநேரம் பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்த முறை தொடர்பில் எரிபொருள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு, கணக்காய்வாளர் நாயகத்திடம் கணக்காய்வு அறிக்கை ஒன்றை கேட்கவேண்டும்.

அதேநேரம் டெபிகியுரா நிறுவனம் கொண்டுவர முடியாது என தெரிவித்த எரிபொருளை, விலை அதிகரித்த பின்னர் எவ்வாறு கொண்டுவந்தது என்பது தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் எரிபொருள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பொதுவான விசாரணையையும் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.