“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

06.06.2026 16:25:40

தொழில்துறை அபிவிருத்திக்காக நேரடியாகப் பங்களிப்பு செய்யும் அரச நிறுவனங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை ”சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் விசேட செயலமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) நடைபெற்றது.

 

இந்தத் செயலமர்வில், அரச நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் நுண்,  சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை இனங்காண்பது மற்றும் அந்தத் தகவல்களை ஒரு தரவுக் கட்டமைப்பில் உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, அந்தத் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும் அந்தந்த நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் தன்மை மற்றும் அளவுகோல்களைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

 

தொழில்துறை அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புடைய திட்டங்களுக்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்கள் குறித்தும் செயலமர்வில் கலந்துகொண்ட அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இந்த வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் ‘சமூக சக்தி’ தேசிய செயற்பாடு ஆகியன தனித்தனியாக அல்லது கூட்டாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை அடையாளம் காண்பது குறித்தும் அந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவை இரட்டிப்பாவதைத் தடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, இந்தச் செயலமர்வின் வளவாளர்களான கெலும் ஜயவீர, மாதவ முதுகுடஆரச்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், ‘சமூக சக்தி’ செயலக அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.