’விஸ்வபானி’ விருது வழங்கல் விழா.
“நாங்கள் மனிதர்கள், நாங்கள் மனிதர்கள்; எங்களுக்கு மன சுதந்திரத்தை கொடுங்கள்!” என்ற தொனிப்பொருளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கோடு, சர்வதேச மனித உரிமைகள் அமைதி அமைப்பு (IHRP) மற்றும் ‘மகா லங்கேஷ்வர’ அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்திய அமைதி மாநாடும் ‘விஸ்வபானி’ விருது வழங்கும் விழாவும் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, களனிப் பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் கலாசாரப் பீடத்தின் (பீடாதிபதி) பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மனித உரிமைகள் ஆய்வு மையத்தின் தற்காலிக பிரதிப் பணிப்பாளருமான விரிவுரையாளர் திலினி கலப்பத்கே ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களால் 'அமைதி' மற்றும் 'மனித உரிமைகள்' குறித்த சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.
100 சாதனையாளர்களுக்கு 'விஸ்வபானி' விருதுகள்:
அதனைத் தொடர்ந்து, ‘மகா லங்கேஷ்வர’ அறக்கட்டளையின் வழிகாட்டலில் விஸ்வபானி விருது வழங்கும் நிகழ்வு அரங்கேறியது. இதில், இலங்கை மக்களுக்காக ஆற்றிய உன்னத சேவைகளைப் பாராட்டும் முகமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 100 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமைகள் அமைதி அமைப்பு மற்றும் லங்கேஷ்வர அறக்கட்டளையின் ஸ்தாபகர், கௌரவ பேராசிரியர், தேசமான்ய சிந்தக சமன் குமார, அதன் சர்வதேசத் தலைவரும் சர்வதேச உறவுகள் பணிப்பாளருமான கௌரவ பேராசிரியர், தேசமான்ய மஹேந்திர ரூபசிங்க மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் கலாநிதி கா. வித்யா மொவிந்து மெனிகே ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.