லெபனானில் கொல்லப்பட்ட பிரெஞ்சு வீரர்.
|
தெற்கு லெபனானில் ஆயுதக் குழுவினர் ஐ.நா. அமைதிப்படையினர் மீது பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் பிரெஞ்சு ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை காலை ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், பிரெஞ்சு ராணுவ வீரர் நேரடியாகத் துப்பாக்கிக் குண்டு காயத்திற்கு உள்ளானார், மேலும் இந்தத் தாக்குதலில் மற்ற மூவர் காயமடைந்துள்ளனர். அவரது உயிரைக் காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாகத் தனது காயங்களால் உயிரிழந்தார். இந்த நிலையில், இந்தச் சம்பவத்திற்கு ஹிஸ்புல்லாவே காரணம் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார். |
|
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு லெபனான் அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு காரணம் ஹிஸ்புல்லா என்பது அம்பலமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள மேக்ரான், இதற்குப் பொறுப்பானவர்களை லெபனான் அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்துகிறது எனவும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்தத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் இராணுவப் படை நடத்திய சொந்த மதிப்பீட்டின்படி, ஹிஸ்புல்லா அமைப்பினர் எனக் கூறப்படும் நபர்களால் தங்கள் துருப்புக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் பிரதமர் நவாஃப் சலாம் ஆகியோருடன் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பேசியுள்ளார். மட்டுமின்றி, இந்தச் சம்பவம் குறித்து முழு விளக்கம் அளிக்குமாறும், இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து தாமதமின்றித் தண்டிக்குமாறும் லெபனான் அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த உயிர்ப்பலி வாங்கிய தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் நவாஃப் சலாம் தெரிவித்தார். கடந்த மாதம் முதல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும், இஸ்ரேலிய எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு லெபனான் பகுதியில் UNIFIL ரோந்து மேற்கொண்டு வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி, ஹிஸ்புல்லா போராளிக்குழு இஸ்ரேலை ஆட்டம் காணவைத்த நிலையில், அமெரிக்கா தலையிட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க லெபனானை கட்டாயப்படுத்தியது. தற்போது இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியதாக ஜனாதிபதி மேக்ரான் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தக் கொடூரமான தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று ஹிஸ்புல்லா மறுத்துள்ளது. பொதுவாக போர் நிறுத்த ஒப்பந்தங்களை வெளிப்படையாக மீறுவது இஸ்ரேலின் குணம் என்றும் ஹிஸ்புல்லா பதிலளித்துள்ளது. |