மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

31.12.2024 08:06:18

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய சட்டதிட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் ஐயாயிரத்து நூறு தனியார் மருந்தகங்கள் செயற்படுகின்றன. இதுவரை காலமும் தனியார் மருந்தகம் ஒன்றை பதிவு செய்வதற்கு மட்டுமே தகுதிவாய்ந்த மருந்தாளர் ஒருவரின் பதிவு சான்றிதழ் தேவைப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளது.

அதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்டிக கங்கந்த தெரிவிக்கையில்,

 “தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சர் மற்றும் தொடர்புடையவர்களை நாங்கள் கோரி வருகிறோம், ஆனால் எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

குறித்த முடிவினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாடாளவிய ரீதியில் செயற்படும் மருந்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுகின்றார்கள். கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவது அப்பகுதிகளில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக அமையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனெனில் மக்கள் மருந்துகளைப் பெற கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆகவே, இந்த வியடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடையும் ஆபத்துள்ளது.