சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை - அனந்தி
சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதிவரை மாவீரர் தினம். அதேபோல மே 18ம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு முதல்நாள் சடுதியாக அந்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்ப்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால் ஒரு கிழமை, மூன்றுநாள், ஐந்து நாள் என்று சென்ற நிலையில் உடினடியாக அதன் முடிவுகளை சொல்லி கொத்தணி உருவாகுவது முழு மாஜையை காட்டினார்கள்.
எங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபொழுது, கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரள்வளையை நெரிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்த வருகின்றார்கள்.
கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது. இம்முறையும் காவற்துறை உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இந்த தடையை காவற்துறையினர் கொண்டுவர விரும்பினால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
அது கொண்டுவர வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்ற கெசட் நோட்டிபிக்கேசன் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லாமல், வெறுமன இன்ன இன்ன தொகுதியை அல்லது மாவட்டத்தை மையப்படுத்தி தடைகளை எடுத்து வருகின்றார்கள்.
இந்த விடயத்தை சவாலுக்குட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்கவேண்டிய வேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும். நினைவுகூரல் என்பது மனித உரிமைக்குரிய ஓர் நிகழ்வு.
அந்த நினைவுகூரலுக்கு கடந்த அரசாங்கமும் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கண்டும் காணாதும் இருந்தார்கள். அதனை எமது மக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அதற்கு அனுமதிக்காத வகையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது.
தடுப்பதற்கான முயற்சிகள் கடந்தவாரமே எடுக்கப்பட்டிருக்கின்றது. வழமையாக எந்த கடும் தேசிய தமிழ்க்கட்சிகளாக இருந்தாலும் பூட்டிய அறைக்குள் அல்லது தமது வளவிற்குள் நினைவேந்தலைசெய்து படங்களை பிரசுரிப்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை. ஏனைய தமிழ் கட்சிகளினுடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனுடைய கட்சியாக இருக்கட்டும் எல்லோருமே ஒன்றுபட்டு இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது பேசப்பட வேண்டும்.
வெறுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல. நாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள். ஆனால், உலகிற்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும். சகல கட்சிகளிலும் சட்டத்தரணிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.
இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிற்குள் பேசி எவ்வாறு இவ்விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.