ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.
புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’, ஏற்கனவே அமுலிலிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தைவிட மோசமானது எனக் குற்றஞ்சாட்டியுள்ள சமத்துவக் கட்சி, அதனை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நாட்டு மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் கடுமையான ஆபத்துக்குள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இச்சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக முன்னர் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அதைவிட மோசமான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் சந்திரகுமார் விமர்சித்துள்ளார்.
எனவே, நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கக்கூடிய இந்தச் சட்டமூலத்தைக் கைவிடுமாறு அரசாங்கத்தை சமத்துவக் கட்சி வலியுறுத்தியுள்ளது.