மாகாண சபைத் தேர்தலால் வலுத்துள்ள சர்ச்சை!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏற்கனவே இருந்த சட்டம் இரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கு பதிலாக தயாரிக்கப்பட்டு வந்த புதிய சட்டத் தொகுப்பு 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சட்டமன்றமே முழுப் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தை நிறுவுதல்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த விடயத்தில் சட்டமன்றம் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தேர்தலைப் பற்றி மட்டும் பேசாமல், தொடர்புடைய சட்டத்தை விரைவில் நிறுவுவதில் உண்மையிலேயே ஆர்வம் காட்ட வேண்டும்.
எல்லை நிர்ணயம் 2018 இல் வழங்கப்பட்ட 50:50 கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
மேலும் அதன் பணிகள் நிறைவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உட்பட முழு நாடாளுமன்றமும் அதை எதிர்த்தது.
பின்னர் இந்த விடயத்தைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் பிரதமரின் குழு நியமிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூர்ய உள்ளிட்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இது சட்டத்தை நிறுவும் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தது. இந்தச் சட்டம் இயற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை நேரடியாகப் பாதித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.