இஸ்ரேல் பிரதமர், ராணுவ தளபதியை கைது செய்ய பிடிவாரண்ட்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்(ICC) பிறப்பித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் இராணுவ தளபதி முகமது டெய்ஃப் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. |
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தளபதி முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்த மூன்று பேரும் மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்களை செய்து இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் மறுத்துள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்(ICC) இந்த தீர்ப்பு “யூத எதிர்ப்பு” (antisemitic) என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவும் ICC தீர்ப்பை நிராகரிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ICC தீர்ப்பை மதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நெதன்யாகு மற்றும் கேலன்ட் இருவரின் கைது வாரண்ட் வரலாற்று முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. |