மின் வெட்டு தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

27.01.2022 06:18:33

மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று  தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு தேவையா என்பதை தீர்மானிக்கும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 25ஆம் திகதி நிலவும் மின்சார நெருக்கடி தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இன்று வரை எவ்வித மின்வெட்டையும் மேற்கொள்ளத் தேவையில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவு மற்றும் மின்சாரத்தின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மின்வெட்டு முன்மொழிவு குறித்து இன்று மறுஆய்வு செய்யப்படவுள்ளது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ சோஜிட்ஸ் தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதால், தேசிய மின் கட்டமைப்பிறக்கு 162 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.