"ரஷ்யா போருக்கு தயார்" - புடின் எச்சரிக்கை!
|
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஐரோப்பா போரைத் தொடங்க விரும்பினால், ரஷ்யா உடனடியாக தயாராக உள்ளது எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் போரைத் தொடங்க விரும்பவில்லை. ஆனால், ஐரோப்பா போரைத் தொடங்கினால், அதற்குத் தயாராக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். |
|
அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், உக்ரைன் போருக்கு முடிவு காணும் நோக்கில் மாஸ்கோவில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, 28 அம்சங்களைக் கொண்ட ஒரு வரைவு திட்டத்தை முன்வைத்துள்ளது. ஆனால், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், அது ரஷ்யாவின் அதிகப்படியான கோரிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளது எனக் கண்டனம் தெரிவித்துள்ளன. “ஐரோப்பிய தலைவர்கள் அமைதிக்கான திட்டத்தை தடுக்கின்றனர். அவர்கள் போர் பக்கம் நிற்கின்றனர்” என புடின் குற்றம் சாட்டியுள்ளார். ட்ரம்ப் முன்வைத்த சமாதானத் திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் மாற்றங்களைச் செய்துள்ளன. அவை, “ரஷ்யாவுக்கு முற்றிலும் ஏற்க முடியாதவை” என அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகள், “உக்ரைனுக்கு நியாயமற்ற சமாதானத்தை திணிக்கக் கூடாது” என வலியுறுத்துகின்றன. ரஷ்யா மேலும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், உக்ரைனின் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது என அவர்கள் எச்சரிக்கின்றனர். ட்ரம்ப் நிர்வாகம், ரஷ்யா மற்றும் உக்ரைன் இருவரின் ஒப்புதலுடன் திட்டத்தை இறுதி செய்ய முயற்சிக்கிறது. ஆனால், புடினின் கடுமையான எச்சரிக்கை, ஐரோப்பா-ரஷ்ய உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யும் அபாயம் உள்ளது. |