ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC!
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலையற்ற தன்மை நீடிக்கும் நிலையில், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை அவசரமாகச் சந்திக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) கோரியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகளாவிய எண்ணெய் சந்தை நிலவரம் இலங்கைக்குக் கவலைக்குரியதாக உள்ளதாகக் குறிப்பிட்ட CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா, நிலைமை மோசமடைந்து வரும் போக்கு குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், டீசல் விலை 45 சதவீதமும் பெட்ரோல் விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
அதன்பின்னர் மசகு எண்ணெய் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளதால், எரிபொருள் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருக்கும் இலங்கைக்கு இச்சூழ்நிலை மேலும் கடினமானதாக மாறியுள்ளது.
எனவே, அடுத்த கட்ட நவடிக்கைகள் குறித்து குறித்து விவாதிக்க நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரியுள்ளோம்.
எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
உள்நாட்டுச் சந்தையில் உள்ள மற்ற எரிபொருள் விநியோகஸ்தர்களும், தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஈரான் மற்றும் உக்ரேன் தொடர்பான மோதல்களால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, வாங்குநர்கள் மாற்று வழிகளில் எரிபொருளைப் பெறத் தீவிர முயற்சி மேற்கொண்டனர்,
இதன் விளைவாக, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் மசு எண்ணெய் விலைகள் இந்த வாரம் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தன.
சில இடங்களில் ஒரு பீப்பாய் விலை 110 அமெரிக்க டொலரை நெருங்கியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எல் நினோ (El Niño) வானிலை மாற்றங்களால் ஏற்பட்ட வறட்சியான சூழல் நீர்மின் உற்பத்தித் திறனைக் குறைத்துள்ளதாகவும், இதனால் மின் உற்பத்திக்கான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதாகவும் ராஜகருணா கூறினார்.
இது எங்களுக்கு மற்றொரு கடுமையான சவாலாக அமைந்துள்ளது.
போதுமான நீர்மின் உற்பத்தி இல்லாத நிலையில், மின்சாரம் தயாரிப்பதற்காக எங்கள் கையிருப்பிலிருந்து அதிக அளவிலான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என்றும் அவர் கூறினார்.