இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது?

15.05.2024 08:07:54

பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது?” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

இது குறித்து எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது” பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்
ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம்.
பாலஸ்தீனத்தின் மீது நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள்.

அந்த அக்கறை எங்கள் மக்கள் மீது இல்லையா? என்று நான் கேட்கின்றேன். பலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச தலையீடு அவசியம் என்றும் கூறும் இலங்கை எமது தமழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூறும் போது உள்ளக விவகாரம் என்று கூறுவது ஏன்? இந்த நாடாளுமன்றத்தில் இருதலைப்பட்சமாக நடந்துகொள்பவர்களும் இருக்கின்றார்கள். அவர்களின் செயற்பாடு நயவஞ்சகமானது.

இந்த யுத்தத்தை பொறுத்தவரையில் ஹமாஸ் – மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலாகும். நாட்டிலும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. அதனை உள்விவகாரம் என்றும், சர்வதேச குற்றச் செயல் அல்ல என்றும் கூறியவர்கள் பலஸ்தீன சம்பவத்தை உள்விவகாரம் என்று கூறுவதில்லை.

மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மக்களை நினைவு கூரும் வாரமாக இந்த வாரம் இருக்கின்றது. எமது மக்கள் இறுதி கட்ட யுத்தக் காலத்தில் கஞ்சியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினார்கள்.
இதனை நினைவுகூர இடமளிக்காமை இந்த அரசாங்கத்தின் அவல நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது.

இந்த விடயத்தில் சம்பூரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட முறையை பார்த்தோம். குறித்த பெண், ஆண் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிகின்றோம். ஆனால் அதே மனசாட்சியுடன் இந்த நாட்டில் 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.