பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டால் போராட்டம் வெடிக்கும்!
|
திறைசேரியை நிரப்பிக் கொண்டிருந்தால் மாத்திரம் பொருளாதாரம் முன்னேற்றமடையாது. மக்கள் மத்தியில் பணம் செல்ல வேண்டும். புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் பொருளாதார நடவடிக்கைகள் சிறந்த முறையில் இயங்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். |
|
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நிதியமைச்சரான ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் சிறந்த திட்டங்களை நாங்கள் வரவேற்போம். அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. நாட்டில் பணவீக்கம் 8.3 சதவீதத்தால் உயர்வடைந்து வாழ்க்கைச் செலவுகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக நிவாரணமளிக்கும் திட்டங்கள் ஏதும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.இது பாரியதொரு குறைப்பாடாகும். அரச சேவையில் 1,60000 பேருக்கு மாத்திரமே மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 சதவீதமானோருக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை. இது பாரியதொரு குறைப்பாடாகும். இந்த அதிகரிப்பில் ஒரு தொகை 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின்னரும், மிகுதி தொகை 2028 ஆம் ஆண்டும் கிடைக்கப் பெறவுள்ளது. அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் வரி அறவிடலையே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளது. வரி அறவிடல் ஊடாக திறைசேரி நிரம்பியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் பணம் இல்லை இது தான் பாரியதொரு பிரச்சினையில்லை. மக்கள் மத்தியில் பணம் புழக்கம் குறைந்துள்ள நிலையில் திறைசேரியில் பணம் நிரம்பியிருப்பால் எவ்வித பயனும் ஏற்படாது. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வருமானத்தை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் நிலைமை, குடும்பங்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இதுவே பாரியதொரு பிரச்சினையாகும். நாட்டில் வறுமை நிலை உயர்வடைந்துள்ளது. பாடசாலை மாணவர்களில் 28 சதவீதமானோர் பகல் உணவு இல்லாமல் பாடசாலைகளுக்கு செல்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர் ஒவ்வொரு மாதமும் குடும்ப தேவைக்காக கடனாளியாகியுள்ளார்கள். பலர் தமது பிள்ளைகளுக்காக உணவு உண்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார்கள்.இது தான் உண்மை. இந்த பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு ஏதும் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்துச் செல்கிறது . திறைசேரியை நிரப்பிக் கொண்டிருந்தால் மாத்திரம் பொருளாதாரம் முன்னேற்றமடையாது. மக்கள் மத்தியில் பணம் செல்ல வேண்டும். புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் பொருளாதார நடவடிக்கைகள் சிறந்த முறையில் இயங்கும். பொருளாதார நெருக்கடிக்குள் மக்களை வைத்துக் கொண்டு, திறைசேரியை நிரப்பி விட்டோம் என்று குறிப்பிடுவதால் எவ்வித மாற்றமும் சமூக கட்டமைப்பில் ஏற்படாது. பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டால் போராட்டம் தோற்றம் பெறும் என்றார். |