தமிழில் அடுத்தடுத்து அறிமுகமான அக்கா, தங்கைகள்

11.01.2022 12:12:06

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் பஞ்சமேயில்லை. அவர்களில் ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று முன்னணியில் இருந்துள்ளார்கள். இப்போதும் வாரிசுகள் பலர் அறிமுகமாகி வருகிறார்கள். இருந்தாலும் அவர்களது தனித் திறமைதான் அவர்களைத் தொடர்ந்து இத்துறையில் இருக்க வைக்கும்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு அக்கா, தங்கைகளாக அறிமுகமாகி சாதித்தவர்களில் கருப்பு, வெள்ளை காலத்தில் லலிதா, ராகினி, பத்மினி ஆகியோரும், 80களில் அம்பிகா, ராதா ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள். நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் பத்து வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நடிகைகளாக அறிமுகமானார்கள். ஆனால், அவர்களால் அம்மா, பெரியம்மாவைப் போல நிலைத்து நிற்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் அவ்வப்போது அக்கா, தங்கைகளின் அறிமுகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது ஷிவானி, ஷிவாத்மிகா, சகோதரிகள் அடுத்தடுத்து தமிழில் கதாநாயகிகளாக அறிமுகமாகியுள்ளார்கள். இவர்கள் நட்சத்திரத் தம்பதிகளான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோரது மகள்கள். அக்கா ஷிவானி, கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அக்காவிற்கு முன்பாகவே, தங்கை ஷிவாத்மிகா கடந்த மாதம் வெளிவந்த 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தில் கதாநாயகியாக அறிமுகானார். இருவருமே தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாக தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார்கள்.

இருவருக்கும் ஒரு படம் தான் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் போதுதான் அவர்கள் முன்னணி இடத்தைப் பிடிப்பார்களா என்பது தெரிய வரும்.