தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது

08.05.2022 11:23:49

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசாங்கம் தமிழக மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளில் என்ன சொன்னார்களோ அதை செய்வதற்கு தவறி உள்ளார்கள்.

சில பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை வாங்கிவிட்டு ஒரு வருடம் கழிந்தும் கூட தேர்தல் வாக்குறுதி குறித்து வாய் திறக்காதது கண்டனத்துக்கு உரியது.

குறிப்பாக தாய்மார்களுக்கு மாதம் ரூ. 1000 வங்கி கணக்கில் கொடுப்போம் என்றார்கள். ஆனால் அது குறித்து எந்த இடத்திலும் வாயை திறப்பதில்லை.

தேர்தல் அறிக்கையில் கூறிய கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி எல்லாம் காற்றில் பறந்துள்ளது. இது எல்லாம் சாத்தியமில்லாத வாக்குறுதிகள் என தெரிந்தும் அவற்றை பொய்யாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு அதை அப்படியே மறப்பதே தி.மு.க.வின் வாடிக்கை. அதைத்தான் தி.மு.க. செய்துள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்கு வரிகள் உயர்த்தப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 100 சதவீதம் வரி அதிகரித்துள்ளது.

மத்திய நிலக்கரித்துறை மந்திரி, நாட்டில் எந்த பகுதியிலும் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது என தெளிவாக சொல்லியுள்ளார். தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

மக்களை பற்றி கவலைப்படாத அரசு தான் தி.மு.க. அரசு. இந்த அரசு மக்கள் மீது மட்டுமன்றி ஊழியர் மீதும் கவனம் செலுத்த முடியாத அரசாக உள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே ‘லாக்கப்’ மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திருவண்ணாமலை, சென்னை என பல பகுதிகளில் நிறைய லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

உக்ரைன் ரஷியா போர் உள்ளிட்ட சர்வதேச நிலைமைகளை பொருத்து கியாஸ் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கம் இருக்கும். இருந்த போதும் மக்களுக்கு கிடைக்கும் மானியம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

தமிழக அரசு தொடர்ந்து இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு அனைத்து மதத்திற்கான நடைமுறைகளை பின்பற்றும் அரசாக இருக்க வேண்டும். ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது மிகவும் கண்டிக்க கூடியது. இது இந்து மக்களை மிகவும் வேதனைப் படுத்தி உள்ளது.

மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள். தமிழக அரசு உடனடியாக இந்து மத நடைமுறைகளுக்கு எதிரான உத்தரவை திரும்பப் பெறும் என்று நான் நம்புகிறேன்.

மீன்வளத் துறையில் ராமேஸ்வரம் பகுதியில் முதன்முறையாக மீனவ பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்தியாவில் முதன்முறையாக கடல்பாசி பூங்கா இந்த பகுதியில் அமைய உள்ளது. தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை கிடைத்ததும் அந்த பணி தொடங்கப்படும்.

மீனவர்களுக்கு ஆழ்கடல் சென்று மீன் பிடிப்பதற்காக ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அதிகம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள மீன்பிடித் துறைமுகங்களை மிகப்பெரிய அளவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது தி.மு.க.