சிறிலங்காவைப் போல் சீனாவிடம் சிக்காதீர்கள்!

10.08.2022 09:48:42

சீனாவிடம் கடனுதவி பெற்று சிறிலங்காவைப் போல் ஆக வேண்டாம் என்று வளரும் நாடுகளுக்கு பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம்

உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து வருகின்றமை மற்றும் நாடுகளின் அபிவிருத்தி குறைந்து வருவதால் சந்தைகளில் அழுத்தங்கள் அதிகரிக்கின்றன.

எனவே சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சியின் மூலம் அதிகக் கடன்களைப் பெறுவது பற்றி வளரும் நாடுகள் இருமுறை யோசிக்க வேண்டும் என்று இந்த செவ்வியின்போது கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோசமான கடன் முடிவுகள் நாடுகளை கடன் நெருக்கடியில் தள்ளும் அபாயம் உள்ளது என்ற கவலையின் மத்தியில் சீனா தனது கடன்களை மதிப்பிடுவதிலும் அதனை வழங்குவதிலும் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவிட்ட தவறு

இந்தநிலையில் சீன ஆதரவு உள்கட்டமைப்புத் திட்டங்களின் மூலம் சிறிலங்கா வருமானத்தை ஈட்ட தவறி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் சீனாவை அனைவரும் குற்றம் சாட்டுகின்றபோது. சீனா உடன்படவில்லை.

எனினும் இந்த நிலைமைக்கு சீனாவே பொறுப்பு என்று ஏ.எச்.எம்.முஸ்தபா கமல் குற்றம் சுமத்தினார். இலங்கையின் நெருக்கடியை பொறுத்தவரை, எந்தெந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சீனா போதுமான அளவு கடுமையாக இருக்கவில்லை என்பதை காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஸின் மொத்த கடனில் 6வீதம் சீனாவின் கடன்களாகும். நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஒரு வருடத்திற்கு முன்பு 45 பில்லியன் டொலர்களாக இருந்து தற்போது 40 பில்லியன்களாக குறைந்துள்ளது. எனினும், இந்த இருப்பு இன்னும் ஐந்து மாத மதிப்புள்ள இறக்குமதிகளுக்கு போதுமானதாக உள்ளது.

இதேவேளை, சிறிலங்காவைப் போல பங்களாதேஷ் ஆபத்தான நிலையில் இல்லை என்று பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல் குறிப்பிட்டுள்ளார்.