தெற்கின் அழைப்புகளுக்கு பொதுக்கட்டமைப்பாக பதிலளிக்க முடிவு!
தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து வரும் அழைப்புக்கள் குறித்து தமிழ் பொதுக்கட்டமைப்பினர் ஒருமித்து ஒரே முடிவை எடுத்து, அதன்படியே சகலரும் நடந்துகொள்ளவேண்டும் என திங்கட்கிழமை நடைபெற்ற தமிழ் பொதுக்கட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து உருவாக்கிய தமிழ் பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்முறை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வார இறுதியில் கடிதமொன்றின் ஊடாக தமிழ் பொதுக்கட்டமைப்பினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். இருப்பினும் அக்கடிதம் ரெலோ மற்றும் ஜனநாயகப்போராளிகள் கட்சி ஆகிய இரண்டைத் தவிர ஏனைய தரப்பினருக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தமிழ் பொதுக்கட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து வருகின்ற அழைப்புக்கள் தொடர்பில் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்வது என்பது குறித்து ஆராய்வதற்காக திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் யாழ்நகரில் உள்ள பொதுவேட்பாளர் அலுவலகத்தில் கூடிய தமிழ் பொதுக்கட்டமைப்பினர் பி.ப 3.00 மணிவரை இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடினர். அதற்கமை இனிவருங்காலங்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்து தென்னிலங்கை வேட்பாளர்களிடமிருந்து வரும் அழைப்புக்கள் குறித்து தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சகல தரப்பினரும் கலந்துரையாடி ஒருமித்த தீர்மானத்தை மேற்கொள்வது என்றும், அதனை சகலரும் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. எனவே தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் அழைப்புவிடுக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த தமிழ் பொதுக்கட்டமைப்பும் அதனை ஏற்றுக்கொண்டு சந்திப்புக்குச் செல்லவேண்டும் அல்லது அழைப்பை நிராகரித்து அதற்குரிய காரணத்தைத் தெளிவுபடுத்தவேண்டும் என்று இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. |