ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூஸிலாந்து !

24.06.2021 11:54:50

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சவுத்தம்டன் மைதானத்தில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் முதல்நாள் ஆட்டம், மழைக் காரணமாக நாணய சுழற்சி இடம்பெறாமலேயே இரத்து செய்யப்பட்டது. இதனால் ஒருநாள் மேலதிகமாக வழங்கப்பட்டது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஜிங்கியா ரஹானே 49 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீஸன் 5 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே 54 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 32 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 170 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணிக்கு 139 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப்பந்த் 41 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 4 விக்கெட்டுகளையும் போல்ட் 3 விக்கெட்டுகளையும் ஜேமீஸன் 2 விக்கெட்டுகளையும் வாக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்து சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையம் பெற்றுக்கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய கெய்ல் ஜேமீஸன் தெரிவுசெய்யப்பட்டார்.