பிரீமியர் லீக்: போராடி வீழ்ந்தது லைக்கா கோவை கிங்ஸ் அணி !

12.08.2021 09:37:29

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடரின் வெளியேற்றுப் போட்டியில், திண்டுக்கல் டிரகன்ஸ் அணியிடம் லைக்கா கோவை கிங்ஸ் அணி போராடி வீழ்ந்தது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நாளை நடைபெறும் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில், சேப்பாக் கில்லீஸ் அணியை திண்டுக்கல் டிரகன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற திண்டுக்கல் டிரகன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாய் சுதர்சன் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் ஷாருக்கான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் டிரகன்ஸ் அணியின் பந்துவீச்சில், குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளையும் விக்னேஷ், சிலம்பரசன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய திண்டுக்கல் டிரகன்ஸ் அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி நிசாந்த் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் விவேக் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா கோவை கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், யுதீஸ்வரன் 2 விக்கெட்டுகளையும் முகிலேஷ், அஜித் ராம் மற்றும் திவாகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடங்களாக ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹரி நிசாந்த் தெரிவுசெய்யப்பட்டார்.