தடுமாறும் ஐரோப்பா!

23.01.2025 09:54:32

உக்ரைன் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸும் பாரிஸில் சந்திக்க உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பா ஒரே குரலில் பதிலளிக்க தடுமாறும் நிலையிலேயே குறித்த சந்திப்பு முன்னெடுக்கப்படுகிறது.

கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவையும் கடுமையான வரி விதிப்பால் அச்சுறுத்தியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுடன் ஐரோப்பாவின் வர்த்தகங்களும் சிக்கலாக மாறி வருகிறது என்றார். ஐரோப்பிய ஒன்றியம் தங்களிடம் மிக மிக மோசமாக நடந்துக் கொள்கிறது. எனவே அவர்களும் வரி விதிப்புகளுக்கு ஆளாகப் போகிறார்கள் என்றார்.

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரங்களைக் கொண்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே அதிக எரிசக்தி செலவுகளை எதிர்கொண்டு வருகிறது. மட்டுமின்றி, சீனாவுடனான வர்த்தகத்திலும் மந்தநிலை காணப்படுகிறது, அமெரிக்காவுடனான புதிய முன்னணி என்ற யோசனையை அவர்கள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் ட்ரம்பின் மிரட்டலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒருமித்த கருத்து இல்லை. இந்த நிலையில், ஐரோப்பாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ அதிகரித்து வரும் வர்த்தகப் போரில் ஆர்வம் இல்லை என்று பிரெஞ்சு அரசாங்க செய்தித் தொடர்பாளர் சோஃபி ப்ரிமாஸ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம். ஜனாதிபதி ட்ரம்புடனான உறவுகள் பரிவர்த்தனை ரீதியானவை. நாம் அமெரிக்காவைப் போலவே உறுதியாக இருக்க வேண்டும், நமது பலத்தைக் காட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிகளுக்க்கு நடுவே மேக்ரான் மற்றும் ஷோல்ஸ் ஆகிய இரு தலைவர்களும் நேரிடையாக சந்தித்து விவாதிக்க உள்ளனர். உண்மையில் இரு தலைவர்களும் தங்கள் நாட்டில் கடும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருபவர்கள்.

கடந்த ஆண்டு திடீரென்று தேர்தலை அறிவித்து அதில் தோல்வி கண்ட மேக்ரான், 2024ல் மட்டும் நான்கு பிரதமர்களை வரிசையாக நியமிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் ஷோல்ஸ் அடுத்த மாதம் நடைபெறும் ஜெர்மன் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளில் தனது எதிர் கட்சியான கன்செர்வேட்டிவ் போட்டியாளரை விட பின்தங்கியிருக்கிறார்.

இந்த இரு தலைவர்களும் சமீபத்திய ஆண்டுகளில் பல விடயங்களில் வேறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுதியான முடிவெடுப்பது என்பது தாமதப்படுத்தப்படுகிறது.

மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தையும் உருவாக்கியுள்ளனர். ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததை அடுத்து முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார அச்சுறுத்தலை நிராகரிக்க வேண்டும் என்றும் தாக்கப்பட்டால் எதிர் வரிகளை விதிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் கூறி வருகிறது.