வடக்கிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் ஐ.நா கரிசனை கொள்ள வேண்டும்.

15.11.2023 08:00:00

சிறுவர்களின் திறன் மேம்பாடு, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முன்வர வேண்டும் என வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் விதங்கள் சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டு செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத செயற்பாடுகள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கு ஆளுநரால் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது,

அத்துடன், சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பான செயற்பாடுகளுக்கு ஐ.நா சிறுவர் நிதியம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், வட மாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி  இதன்போது தெரிவித்துள்ளார்