22வது திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம்!
|
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார். |
|
புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த தீர்ப்பு கிடைத்தவுடன் அது பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார். நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம். நாங்கள் பயமின்றி முன்னோக்கிச் செல்வோம். அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அச்சமடைவார்கள். தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள். உலக அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களையும் மக்களுக்காகவே எடுக்கிறோம். எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப் பெறமாட்டோம். 22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். பத்திரிகைகளில் 18ஆம் திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். தீர்ப்பு கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம். இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும். அப்படித்தான் இந்தக் கறுப்பு ராஜ்யத்தை தகர்க்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். |