ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி ஒப்புதல் !

22.07.2021 10:42:19

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 2020 டிசம்பர் 5ஆம் திகதி முதல் 2021 மார்ச் 31ஆம் திகதி வரை ஸ்பூட்னிக் வி இன் இரு டோஸ்களுக்கும் தடுப்பூசி போடப்பட்ட ரஷ்யாவில் உள்ளவர்களிடையே, கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறித்த தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் ஸ்பூட்னிக் வி இன் செயற்திறன் 97.6 சதவீதமாகும்.

இந்த நிலையில், சிலி ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு 15.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது 80 சதவீத மக்கள் நோய்த்தடுப்பு மருந்துகளை தடுப்பதே சிலி அரசாங்கத்தின் குறிக்கோள்.

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயற்திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு தற்போது 69 நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளில் ஒன்று என்பதை ஸ்பூட்னிக் வி நிரூபிக்கிறது என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

அரசாங்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் வழங்கிய ஒப்புதல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ரஷ்ய தடுப்பூசி இரண்டாவது இடத்தில் உள்ளது.

19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சிலியில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 1,602,854பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,611பேர் உயிரிழந்துள்ளனர்.