இவரே பொருத்தமானவர்- முற்கூட்டியே தீட்டப்பட்ட திட்டம் !

21.05.2022 09:28:13

அரசியல் குடும்பங்களுக்கு இடையில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே அதிகார பரிமாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ராஜபக்ச குடும்பத்தினர் தாம் இலகுவாக வெளியேறும் வழிகளை உருவாக்கி இருந்தனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே எதிர்வுகூறியிருந்தனர் எனவும் எதிர்காலத்தில் சமூக எழுச்சி உருவாகும் என புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டி இருந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ராஜபக்ச குடும்பம் தாம் இலகுவாக வெளியேறும் வழியை உருவாக்க, எப்போதும் தமது குடும்பத்தை பாதுகாத்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பலத்தை வழங்க ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சென்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனுஷ நாணயக்கார கடந்த 2011 ஆம் ஆண்டு 18 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதற்காக அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்தார்.

ஹரின் பற்றி ஒரு கவலை இருந்தாலும் மனுஷ நாணயக்கார பற்றி அதிகமாக எண்ண தோன்றவில்லை எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.