
ஏர் இந்தியா கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், கொக்பிட் (Cockpit) எனும் குரல் பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்த விபத்திற்கான சாத்தியமான காரணத்தைக் கண்டறிய உதவும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
முன்னதாக, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB), விபத்துக்குள்ளான விமானத்தின் விமானத் தரவுப் பதிவுக் கருவி (FDR) மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தது.
ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் சிவில் மருத்துவமனைக்கும் சென்று கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், விபத்துக்கான காரணத்தை புலனாய்வாளர்களால் எளிதாகக் கண்டறிய முடியும்.
போயிங் 787-8 (AI 171) ரக விமானத்தில் பயணித்த 242 நபர்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தினை எதிர்கொண்டனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 நபர்களும், தரையில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.