’அணு ஆயுத தயாரிப்பை கைவிடாவிட்டால் ஈரான் மீது தாக்குதல்’.

31.05.2026 08:04:29

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் என்று ஆரம்பத்தில் இருந்து கூறிவரும் அமெரிக்கா, அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புதல் தராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் நேற்று சனிக்கிழமை சிங்கப்பூரில் அளித்த பேட்டியில், 

போர் நிறுத்தத்தை நீடிப்பதற்காக அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையை தொடர்வதிலும் உறுதியாக இருக்கிறது.

நாங்கள் இராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கான அத்தனை திறமையும், பலமும் எங்களிடம் இருக்கிறது. சொல்லப் போனால் தேவைக்கு அதிகமாகவே தயாராக இருக்கிறோம்.

எங்களுடைய ராணுவத் தளவாட பலமானது ஈரானை தாண்டியும், உலகில் எங்கு வேண்டுமானாலும் போர் நெருக்கடியை சமாளிக்கும் அளவுக்கு சிறந்த இடத்தில் உள்ளது.  

ஈரான் மோதலில் கவனமாக இருக்கும் நேரத்தில் இந்தோ - பசிபிக் பிரச்சினையையும் நாங்கள் உற்று கவனித்து வருகிறோம்.

எங்களால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும். அந்த வகையில் நாங்கள் எங்கள் இராணுவ பலத்தை மெருகேற்றி வருகிறோம்.

இந்தப் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்றே ஜனாதிபதி  ட்ரம்ப் விரும்புகிறார். அதே வேளையில் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வசமாகக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். அதுவே அவரது பொறுமைக்கும் காரணம் என்றார்.