துருக்கியில் மணிக்கு 129 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி

30.11.2021 08:19:43

துருக்கி இஸ்தான்புல் நகரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள  இஸ்தான்புல் நகரில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கடல்கா மாவட்டத்தில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், பிரம்மாண்ட மணிக்கூண்டு ஒன்று இடிந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக மணிக்கூண்டு அருகே யாரும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. புயலில் வணிக வளாகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சுமார் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேசமயம் மற்றொரு இடத்தில் சாலையோரம் இருந்த தகரம் ஒன்று சரிந்து விழுந்ததில் நூலிழையில் ஒருவர் உயிர் தப்பினார்.

புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடுமையான சூறாவளியால் இதுவரை 4 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே மத்திய கடற்பகுதி மற்றும் கருங்கடல் பகுதியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.