அவுஸ்திரேலியாவுடனான தொடரை கைப்பற்றி இலங்கை அணி

22.06.2022 06:36:09

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று, 30 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுடனான தொடரை கைப்பற்றி இலங்கை அணி வரலாறு சாதனை படைத்ததுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.   

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு போட்டி மீதமிருக்க 3 - 1 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

கடந்த 12 வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 30 வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது சொந்த மண்ணில் வெற்றிபெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.   

இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சரித் அசலன்க குவித்த அபார சதம், தனஞ்சய டி சில்வாவின் சகலதுறை ஆட்டம், சிறப்பான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.