“திருமண வீட்டில் பேசவேண்டிய உரையை மரண வீட்டில் பேசியதற்கு சமமானது” – சாணக்கியன்
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது “திருமண வீட்டில் பேசவேண்டிய ஒரு உரையை மரண வீட்டில் பேசியதற்கு சமமானது”.
நாட்டின் உண்மையான நிலைமைகளை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்டத்தை உருவாக்காது அடுத்த தேர்தல்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட வரவு – செலவு திட்டமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (15), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும், அதற்கு முன்னரும் தமிழ் தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்தால் மட்டுமே வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்தி செய்யலாம் என்ற மாயையை உருவாக்கி, தமிழ் மக்களின் வாக்கை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இன்றுவரை எமது மக்களுக்கு எந்தவொரு நலனும் இந்த வரவு செலவு திட்டத்திலும் இல்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் குறித்து இந்த வரவு செலவு திட்டம் கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்கிடமான விடயமாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கான வீட்டுத்திட்டத்தை கூட இன்னமும் முடிக்கவில்லை. எனவே அதனை பூர்த்தி செய்ய நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதேபோல் ஏனைய சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இந்த வரவு செலவு திட்டம் எவ்வாறானது என்றால் “திருமண வீட்டில் பேசவேண்டிய ஒரு உரையை மரண வீட்டில் பேசியதற்கு சமமானது” போன்றதாகும். நாட்டின் நிலைமையே இன்று மரண வீட்டிற்கு சமமானதாக உள்ள நிலையில் திருமண வீட்டில் ஒரு உரை நிகழ்த்தினால் எவ்வாறு இருக்கும். அது போன்றதொரு உணர்வே ஏற்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் 300 பக்கங்களில் செலவும் 30 பக்கங்களில் வரவும் உள்ளதையே அவதானித்தோம். பல துறைகளில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் உருவாக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் குறித்த அறிவு இவர்களுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த கட்ட தேர்தலை இலக்கு வைத்து ஒரு சில நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது, முன்னர் அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த எரிபொருள் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இன்று இலங்கையில் பணம் அச்சடிக்கப்படுகின்றது.
ஆனால் டொலர்களை பெற்றுக்கொள்ள உருப்படியான வேலைத்திட்டமொன்று இல்லை. எம்.சி.சி போன்ற உடன்படிக்கைகள் கொண்டுவரப்பட்ட வேளையில் பொய்யான தேசிய வாதிகள் அதனை தடுத்தனர். இவ்வாறான செயற்பாடுகளே நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படவும் காரணமாகும். முதலீட்டாளர்கள், இறக்குமதியாளர்கள் நேரடி டொலர் வியாபாரத்தில் ஈடுபடுவதில்லை.
எனவே தரப்படுத்தல் நிறுவனங்களின் மூலமாக தரப்படுத்தலை உயர்த்தும் வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 2019 ஆம் ஆண்டில் சிறந்த முறையில் இருந்த அனைத்து வரிக் கொள்கையையும் இந்த அரசாங்கத்தினர் நாசமாக்கிவிட்டனர்.
ஷங்க்ரில்லா ஹோட்டலில் சாப்பிடும் ஒருவருக்கு வட் வரி விதிக்கப்படுவதில்லை, ஆனால் அப்பாவி மக்களின் பொருட்களுக்கு வரி சுமத்தப்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சுற்றுலாத்தறையை பலப்படுத்தவும், வடக்கு கிழக்கிற்கு சுற்றுலா பயணிகளை வரவழைக்கவும் தொடர்பாடலை உருவாக்க வேண்டும். விமான நிலையங்கள், துறைமுகங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இராமேஸ்வரம் தலைமன்னார் படகு சேவையை உருவாக்க வேண்டும். பலாலி சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினால் சுற்றுலாத்துறை மூலமாக 5 பில்லியன் பெற்றுக்கொள்வது சாத்தியப்படும். நீங்கள் இன்னமும் இரண்டு முகங்களை வெளிப்படுத்தி வருகின்றீர்கள்.
வடக்கு கிழக்கு – இந்திய தொடர்பாடலை ஏற்படுத்த ஏன் அஞ்சுகின்றீர்கள். நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இந்த நாட்டில் ஒன்றாக ஒரே தேசத்தில் வாழவே வலியுறுத்துகின்றோம். ஆனால் அதனை நிராகரிப்பது நீங்களே, இதனால் தான் மக்களின் ஆதரவையும் நீங்கள் இழந்து வருகின்றீர்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, மூன்று காலகட்டத்தில் ஆட்சியில் இருந்து வருகின்றீர்கள். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆசிய வளயத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியாக உள்ள நீங்கள் ஏன் தீர்வுகள் குறித்தோ அல்லது சமத்துவம் குறித்தோ எந்த தீர்மானமும் எடுக்காதுள்ளீர்கள். அரசியல் தீர்வுகள் குறித்த பேச்சுக்கள் தீர்மானங்கள் இடை நடுவே கைவிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை என்றால், ராஜபக்ஷவினரின் மீதான இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை இழக்கப்படும்.
இன்னும் 20 ஆண்டுகளில் இந்த நாட்டு நிலைமையை பார்க்கையில், இந்த நாட்டை ராயபக்ஷவினரே நாசமாக்கினர் என்ற கருத்து முன்வைக்கப்படும்.
இன்று எடுக்கும் தவறான தீர்மானங்கள் காரணமாக எமது அடுத்த சந்ததியே பாதிக்கப்படப்போகின்றது. நாம் நியாயமான கோரிக்கைகளை கேட்கின்றோம். நாம் பிரிவினை வாதிகள் என்ற கருத்தை கூறி பிரிவினையை உருவாக்கி அரசியல் செய்து வந்துள்ளீர்கள், இனியும் இந்த சாபக்கேடு இருக்கக்கூடாது எனவும் அவர் கூறினார்.